Tuesday, May 10, 2016

தினம் ஒரு பாசுரம் - 73

செழுந்திரைப் பாற்கடல் கண் துயில் மாயன் திருவடிக்கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நல் ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப் பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே


- ராமானுச நூற்றந்தாதி (திருவரங்கத்து அமுதனார்)


இன்று எம்பெருமானார், உடையவர், எதிராசர், இளையாழ்வார், பாஷ்யகாரர் என்று வைணவ அடியார்கள் போற்றித் துதிக்கும் எந்தை பகவத் ராமானச முனியின் 1000-வது ஆண்டு திருவதார நட்சத்திர ஆரம்ப தினம் (சித்திரையில் செய்ய திருவாதிரை நாள்).   அடுத்த ஆண்டு (2017) சித்திரை திருவாதிரை நாளில் அந்த மகானுபாவர் அவதரித்து 1000 ஆண்டு காலம் முடிவுறுகிறது.

கூரத்தாழ்வானின் சீடரான திருவரங்கத்து அமுதனார் அன்னாரைப் போற்றி அருளிய ஒரு பாசுரத்தை இன்று அனுபவிக்கலாம்.

ஸ்ரீமன் நாராயணனைச் சரணடைந்தவர்கள் அனைவரும் வைணவர்கள் என்றதோடு நில்லாமல், திருக்கோட்டியூர் சௌம்ய நாராயணப் பெருமாள் கோயில் கோபுரத்தில் ஏறி நின்று, தனது ஆச்சார்யரான திருக்கோட்டியூர் நம்பியின் கட்டளைக்கு மாறாக, அஷ்டாட்சர மந்திரத்தை, சாதி பேதம் பாராமல், அனைவருக்கும் உபதேசித்தவர் அண்ணல் இராமனுசன்! வைணவ சம்பிரதாயத்தை நெறிப்படுத்தி, கோயில் ஒழுக்கை ஏற்படுத்தி, வைணவம் செழித்து தழைக்க இவ்வுலகில் அவதரித்த எம்பெருமானார், வைணவ குருபரம்பரை என்ற ஆரத்தின் நடுநாயகமாய் திகழும் மாணிக்கக் கல் போன்றவர் என்றால் அது மிகையில்லை.

பொருளுரை:

செழுந்திரைப் பாற்கடல் - அழகிய அலைகள் (ஆர்பரிக்கும்) திருப்பாற்கடலில்
கண் துயில் மாயன் - யோக நித்திரையில் பள்ளி கொண்டிருக்கிற (உலக ரட்சகனான) திருமாலின்
திருவடிக்கீழ் விழுந்திருப்பார் - திருவடிகளில் சரண் புகுந்த அடியவரின்
நெஞ்சில் மேவு நல் ஞானி - உள்ளத்தில் பொருந்தி அமைந்த சிறந்த ஞானியும்,
நல் வேதியர்கள் - சிறந்த குணங்கள் கொண்ட வேதியர்களால்
தொழும் திருப்பாதன் - போற்றி வணங்கப்படும் திருவடிகளை உடையவராயும் இருக்கும்
இராமானுசனைத் தொழும் பெரியோர் - எம்பெருமானாரை (சேவித்து) வழிபடும் மேன்மக்கள்
எழுந்து இரைத்து ஆடும் இடம் - களிப்புடன் (அவரைத் துதி பாடியபடி) கூத்தாடும் இடம் (மட்டுமே)
அடியேனுக்கு இருப்பிடமே - அடியேனான எனக்கு (மகிழ்ச்சி தரும்) இருப்பிடமாகும் (திருத்தலமும் ஆகும்)


பாசுரச் சிறப்பு:

இப்பாசுரத்தில், வைணவத்தில் முக்கியக் கோட்பாடான “அடியார்க்கு அடியாராய் இருக்கும்” மாண்பு போற்றப்பட்டுள்ளது. எப்படி என்று பார்ப்போம்.

”திருவடிக்கீழ் விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நல் ஞானி”  - பரமனின் திருவடிகளில் பரிபூர்ண சரணாகதி அடைந்த அடியவர்கள், பரமபதமான மோட்சத்தின் கடை வாயிலில் நிற்பவர்கள். அப்பேர்ப்பட்டவர்களின் உள்ளங்களில் கூட ராமானுஜர் குடிகொண்டிருக்கிறார் என்று எம்பெருமானாரின் மேன்மையை அமுதனார் நமக்கு உணர்த்துகிறார்! திருப்பாற்கடல் மாயவனின் மனதிலேயே உறைந்திருக்கும் எம்பெருமானார் அடியவரின் மனதில் மேவி இருப்பதில் ஆச்சரியம் இல்லை தானே :-) அதோடு, பரமனிடம் சரண் புகுந்தாலும், ராமானுஜ திருவடி சம்பந்தம் மட்டுமே, பரமபதம் எனும் பெரும்பேற்றை அருள வல்லது என்பதையும் அமுதனார் அற்புதமாகச் சொல்லிவிடுகிறார். “உய்ய ஒரே வழி உடையவர் திருவடி” என்பது புரிகிறதல்லவா!

“நல் வேதியர்” என்பவர் நற்குணங்கள் பெற்றவர்கள் மட்டுமே. அவற்றில் தலையானவை, அகந்தையின்மை (Humility), உயிர்களிடத்தில் உயர்வு/தாழ்வு பாராமை, திருமால் அடியார்க்கு தொண்டு செய்தல், ஞான, பக்தி, யோகங்களைக் கைக் கொள்ளுதல், அதே நேரம், தங்கள் கடமைகளை செவ்வனே செய்யும் கர்ம யோகிகளை மதித்தல் ஆகியவை.  ஆக, வேதியர் என்பது பிறப்பால் ஏற்படுவதன்று, அடியவரின் நடத்தையே சீர்மிகு குணங்களே அதை நிச்சயிக்கின்றன! இதுவும் எந்தை இராமனுஜர் நியமித்த வைணவக் கோட்பாடே என்பதை உணர்வோம்.

குருபரம்பரையின் கடை ஆச்சார்யனான, நம்பெருமாளான அரங்கன்
 “ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||” 

என்ற தனியனைச் சொல்லி தனது ஆச்சார்யனாக ஏற்ற, ஆச்சார்ய ரத்ன ஹாரத்தை பூர்த்தி செய்த, மணவாள மாமுனிகள் (இந்த மஹாசார்யருடன் குருபரம்பரை நிறைவு பெறுவதாகக் கூறுவது வைணவ மரபு) அருளிய உபதேச ரத்னமாலை என்ற நூலில் ராமானுஜரின் சீர்மையைப் போற்றியிருப்பதை நோக்கினால், ”எம்பெருமானார் வழியே வைணவ அடியவரின் வழி” என்பது தெளிவாகப் புலப்படும்.

ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் - ஏழ்பாரும்
உய்ய எதிராசர் உதித்து அருளும் சித்திரையில்
செய்ய திருவாதிரை

என்று எம்பெருமானார் பூவுலகில் அவதரித்த தினம், ஆழ்வார்கள் உதித்த தினங்களைக் காட்டிலும், அடியவர்க்கு வாழ்வும், உய்வும் தரும் நாள் என்கிறார் மணவாள மாமுனிகள்.

மற்றொரு பாசுரத்தில்
எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார்

என்று திருமாலின் சீர்மை, பெருமாளை/ஆழ்வார்களைப் போற்றுதல் என்பது “எம்பெருமானார் தரிசனமே” என்று அரங்கனே நியமித்ததாக மாமுனிகள் அருளுகிறார். அதாவது, எம்பெருமானாரே, அவருடைய வாழ்நாளில், வைணவ தர்மத்தைச் சிறந்து விளங்கச் செய்தார். தன்னுடைய முன்னோர்களான நாதமுனி, ஆளவந்தார், திருக்கச்சி நம்பிகள் போன்ற ஆச்சார்ய பெருமக்களின் உபதேச மொழிகளை அனைவரும் புரிந்து கொள்ளும்படி எளிமையாக விளக்கினார்.

 ராமானுஜருக்குப் பின் வந்த குருபரம்பரை ஆச்சார்யர்கள், அவர் சொன்ன பாதையிலேயே பயணித்து, ஆழ்வார் அருளிச்செயலான திவ்ய பிரபந்தத்துக்கு பல ஈடுகளையும், வைணவ நெறி சார் உபதேச நூல்களையும் இயற்றினர். ஆக, வைணவ கோட்பாடுகள், நெறிகள், உபதேசங்கள் ஆகிய அனைத்தும் “எம்பெருமானார் தரிசனத்தால்” விளைந்தவை என்பதை மணவாள மாமுனிகள் தெளிவாக உணர்த்துகிறார்.  

இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே!

திருவரங்கத்து அமுதனார், ”சம்சார பந்தமும் வேண்டாம், பரமபத வாசம் கூட வேண்டாம், ராமானுஜ அடியார்களுடன் கூடி வாழும் பேறு மட்டுமே தனக்குப் போதுமானது, அவ்வடியார்கள் வாழும் இடமே தான் வாழ விரும்பும் திருத்தலம்” என்று எம்பெருமானாரின் மேன்மையின் உன்னதத்தை, பாசுரத்திற்கு முத்தாய்ப்பாய் அருளியிருக்கிறார்!

முடிவுரை:

அமுதனார் மற்றொரு பாசுரத்தில் சொல்வதைக் குறிப்பிடுவது இங்கே பொருத்தமாக இருக்கும்.

“இன்புற்ற சீலத்து ராமானுச! என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்து இறந்து எண்ணரிய
துன்புற்று வீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே”


பாசுரத்தை பிறிதொரு சமயம் விரிவாகப் பார்க்கலாம். இப்போது சாரம் மட்டும்.

”இன்பம் தரவல்ல மேன்மைக் குணங்கள் கொண்ட எம்பெருமானாரே! (மோட்சம் கூட வேண்டாம்!) பிணியுறக்கூடிய உடலோடு எத்தனை பிறப்புகள் எடுத்து, சொல்லவொண்ணாத் துன்பங்களில் விழுந்தாலும், உமது தொண்டர்களிடத்தில் அன்பும், அவர்க்கு தொண்டு செய்ய வல்ல பேறும் எனக்கு அருளுங்கள், அது ஒன்றே போதும்” என்கிறார் திருவரங்கத்து அமுதனார். என்னே அவரது ராமானுஜ பக்தி !!!

--எ.அ.பாலா

2 மறுமொழிகள்:

chinnapiyan said...

நன்றி நன்றி நன்றி. நான் சிறு வயது முதலே அடியாருக்கு அடியார் தொண்டு செய்தலை, விரும்பி தன்னிச்சையாக செய்து வருகிறேன்.இது எப்படி என்னை ஆட்கொண்டது என்பதை நான் அறியேன். பூர்வ ஜென்மத்தின் பலாபலனாகத்தான் இருக்கவேண்டும் :)

அதை பற்றி மேலும் என்னை அறிய வைத்ததற்கு நன்றி.
அருமையா ஸ்டெப் பை ஸ்டெப்பா பொருள் கூறி , நெஞ்சில் பசுமரத்தாணிபோல் பதிய வைக்கும் விளக்கவுரை அருமை அருமை :))

உடையவர் இராமுனுஜரே போற்றி அவரை தொடர்ந்து வந்த ஆழ்வார்களும் போற்றி போற்றி .
ஆழ்வார்களின் பெருமைகளை சொல்லும் உங்களுக்கும் மோட்சம், அதை கேட்பவர்கள் எங்களுக்கும் மோட்சம் நிச்சயம் :)) வாழ்த்துகள்

enRenRum-anbudan.BALA said...

//பூர்வ ஜென்மத்தின் பலாபலனாகத்தான் இருக்கவேண்டும்// எதுவாக இருப்பினும், சிறந்த குணம் இது

//உடையவர் இராமுனுஜரே போற்றி அவரை தொடர்ந்து வந்த ஆழ்வார்களும் போற்றி போற்றி . //

ஆழ்வார்களுக்குப் பின் தான் இராமனுஜர் அவதரித்தார். கடை ஆழ்வாரான திருமங்கை மன்னனுக்கும் அவர் உதித்ததற்கும் இடையே 200+ ஆண்டுகள் கழிந்தன என்பது வைணவ வரலாறு.

//ஆழ்வார்களின் பெருமைகளை சொல்லும் உங்களுக்கும் மோட்சம், அதை கேட்பவர்கள் எங்களுக்கும் மோட்சம் நிச்சயம்//
எழுதுவதும் உங்களைப் போன்றோர் அதை அனுபவித்து வாசித்தலும் மன நிறைவு தருகிறது. இப்போதைக்கு அது போதும். மோட்சம் இன்னும் எத்தனை பிறப்புகளுக்குப் பின் என்று தெரியவில்லை. பெருமாள்/ஆழ்வார் சித்தம் :-)

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails